Blogroll

வெள்ளி, 16 டிசம்பர், 2011

இணைய இணைப்பு எப்படி இயங்குகிறது?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும். தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல் கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.
கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வேண்டுமானாலும் -- இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் -- என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனை "கிளையண்ட்' என அழைக்கிறோம். தற்போதைக்கு "வாடிக்கையாளர்' என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இணைய தளம் வேண்டும் என்று சொன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்' என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்' என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.
நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி - ஐ.பி. பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.

அதென்ன தகவல் பாக்கெட்?
இன்டர்நெட் என்பது "பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்' என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் "சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்' என அழைக்கப் படுகிறது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படுகின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத்தால் அதிக இடம் பிடிக்கும் என்பதால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள்ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பாளத்தில் இணைத்து பூட்டு போடுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப்பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத்தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்றன. ஒவ்வொரு ஹெடரிலும் "செக்சம்' (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வரவேண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல்படுத்துகிறது.
இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம்ப்யூட்டருக்கு ஏற்றபடி மாறுகிறது? நீங்கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், "டொமைன் நேம் சர்வர்' (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர்வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ.எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

பேஸ்புக் வைரஸ்

இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல. இதில் கிளிக் செய்தால், .scr என்ற துணைப் பெயருடன் கூடிய பைல் ஒன்று உள்ளது. இதில் கிளிக் செய்தவுடன் ZeuS crimeware என்ற வகை வைரஸ் ஒன்று உள்ளே நுழைகிறது. தற்போது இது Win32.HLLW.Autoruner.52856 மற்றும் Heure: Trojan.Win32.Generic ஆகிய வைரஸ்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. உங்கள் பேஸ்புக் தளத்தில் எந்த இமேஜ் பைலாக இருந்தாலும் அதில் கிளிக் செய்திடும் முன் ஒருமுறை யோசிக்கவும். 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

புதன், 23 நவம்பர், 2011

கம்ப்யூட்டரில் பேக்கப் எடுக்கப்பட வேண்டிய முக்கியமான பைல்கள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் அதில் உள்ள டேட்டாவினை குறிப்பிட்ட கால அவகாசத்தில் அல்லது தினந்தோறும் பேக்கப் எடுத்து வைக்க முயற்சிப்பதே இல்லை. இதற்குக் காரணம் நம் கம்ப்யூட்டர் என்ன நின்றா போய்விடும்? என்ற தவறான எண்ணப் போக்குதான். இந்த தவற்றைப் பலர் செய்கின்றனர். முக்கியமான பைல் களைப் பேக்கப் எடுப்பதில்லை. ஒரு சிலருக்கோ முக்கிய மான பைல்கள் எவை என்று தெரிவதில்லை.
எந்தெந்த பைல்களை எல்லாம் பேக்கப் எடுக்க வேண்டும்? நீங்கள் உருவாக்கிய எல்லா பைல்களையும் (வேர்ட், எக்செல், அக்சஸ், பவர்பாயிண்ட் பைல்கள்) பேக்கப் எடுக்க வேண்டும். எழுத்து வகைகள், ஐகான்கள், கர்சர்கள், வால்பேப்பர்கள், தீம்கள், ஸ்கிரீன்சேவர்கள், எம்பி3 பைல்கள், வீடியோ பைல்கள் என இண்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்த எல்லா பைல்களையும் பேக்கப் எடுக்க வேண்டும். இமெயில்கள், இமெயில்களின் விதிகள், பேவரிட் தளங்கள், முகவரி புத்தகங்கள், நண்பர்கள் பட்டியல்கள் என இண்டர்நெட் சேவைகள் தொடர்பானவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். இவற்றை பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

உங்களது பைல்கள்:
எம்எஸ் வேர்ட், எம்எஸ் எக்செல் போன்ற பெரும்பாலான அப்ளிகேஷன்கள் வழியாக நீங்கள் உருவாக்குகிற பைல்களை My Documents என்ற போல்டரில்தான் கம்ப்யூட்டர் சேமிக்கும். எனவே இந்த போல்டரைப் பேக்கப் எடுக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் படங்களை My Pictures போல்டரிலும், ஆடியோ பைல்களை My Music போல்டரிலும், வீடியோ பைல்களை My Video போல்டரிலும் போட்டு வைக்கும். இந்த போல்டர்கள் எல்லாமே My Documents போல்டரின் கீழ்தான் வருகின்றன. எனவே My Documents போல்டரை பேக்கப் எடுத்தால் இவையும் தாமாகவே பேக்கப் ஆகிவிடும்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் செட்டிங்:
மைக்ரோசாப்ட் ஆபீஸ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறவர்கள் பல செட்டிங்களை அங்கு கொடுத்திருக்கலாம். மெனு, டூல்பார், டெம்ப்ளேட் போன்ற செட்டிங்கள், இமெயில் விதிகள் எனப் பலவற்றை பேக்கப் எடுக்க Save My Settings Wizard என்ற ஒன்றை ஆபீஸ் எக்ஸ்பி தந்துள்ளது. ஆபீஸ் எக்ஸ்பி சிடி டிஸ்க்கில் உள்ள இதை நிறுவினால் மைக்ரோசா ப்ட் ஆபீஸ் தொடர்பான எல்லா செட்டிங்குகளையும் பேக்கப் எடுக்கலாம்.

எழுத்து வகைகள்:
பல அப்ளிகேஷன்களை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவும் பொழுது அவை தங்களுக்கு வேண்டிய எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி இருக்கும். இண்டர்நெட்டில் இருந்து பல எழுத்து வகைகளை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுன்லோடு செய்திருப்பீர்கள். C:/windows போல்டரின் கீழ் Fonts என்ற பெயரில் உள்ள போல்டரில்தான் எல்லா எழுத்து வகைகளும் காணப்படும். இதை பேக்கப் எடுங்கள்.

இன்டர்நெட் விவரங்கள்:
இன்டர்நெட் வெப் தளங்களில் நீங்கள் நுழைந்தவுடன் இந்த தளங்களுக்கு மீண்டும் வர வேண்டும் என்ற ஆவல் பிறக்கலாம். அப்படிப்பட்ட தளங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்படி பிரவுசருக்கு தெரிவிக்க முடியும். இதற்காகவே Bookmarks அல்லது Favorites என்ற மெனு பிரவுசரில் காணப்படும்.
பிரவுசருக்கு அடையாளம் காட்டப்பட்ட வெப் தளங்களின் பட்டியல் Bookmarks அல்லது Favoritesல் சேமிக்கப்பட்டிருக்கும். இந்த பட்டியலை பேக்கப் எடுக்க வேண்டும். எப்படி பேக்கப் எடுப்பது என்பது பிரவுசரை பொறுத்து மாறுபடும். எடுத்துக்காட்டாக இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் File=>Import and Export கட்டளை மூலம் அந்த பேவரிட் பட்டியலை ஒரு பைலில் சேமித்து பின்பு அந்த பைலை பேக்கப் எடுக்க வேண்டும்.
உங்களுக்கு வந்துள்ள இமெயில்களை நீங்கள் பேக்கப் எடுக்க வேண்டும். மேலும் உங்கள் இமெயில் அக்கவுண்ட் பற்றிய விவரங்கள், முகவரி புத்தகம், இமெயில் வடிகட்டல் விதி, சிக்னேச்சர் போன்றவற்றையும் பேக்கப் எடுக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் இமெயில் புரோகிராமில் எப்படி பேக்கப் எடுப்பது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி செயல்படுங்கள்.
விண்டோஸின் Find அல்லது Search கட்டளை மூலம் BMP, JPG, JPEG, GIF, SCR, WAV, MDI, MP3, MPG, DAT போன்ற பைல்கள் கம்ப்யூட்டரில் எங்குள்ளன என்று தேடி அவற்றை பேக்கப் எடுப்பது நல்லது. 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கம்ப்யூட்டரில் தகவல்கள் திருட்டு

நாம் தகவல்களைத் தேடி, நண்பர்களைத் தேடி இணையத்தில் உலா வருகையில், நமக்குத் தெரியாமல், பல நிறுவனங்கள், தங்கள் வேவு பார்க்கும் பைல்களை நம் கம்ப்யூட்டரில் பதிக்கின்றன. நாம் செல்லும் தளங்கள் குறித்து தகவல்களைச் சேகரிக்கின்றன. இவற்றை பின்னர் விற்பனை செய்கின்றன. இந்த தகவல்களைப் பெறும் நிறுவனங்கள், நாம் பார்க்கும் தளங்களின் அடிப்படையில் தங்கள் வர்த்தக ரீதியான விளம்பரங்களை அனுப்புகின்றன. சில நிறுவனங்கள் தாங்கள் இணைய செயல்பாடு குறித்து மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு இந்த தகவல்களைப் பயன் படுத்துகின்றன.
நம் கம்ப்யூட்டரில் நமக்குத் தெரியாமல் நம் செயல்பாடுகள் கண்காணிப்பதற்கு புரோகிராம்களா எனக் கவலைப்படுகிறீர்களா? இவை அவ்வளவு ஒன்றும் நீங்கள் எண்ணும் அளவிற்கு மோசமானவை அல்ல. இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் குறித்து பல மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் உலவி வருகின்றன. அவற்றின் உண்மைத் தன்மை குறித்து இங்கு காணலாம்.
1. ஒரு சில நிறுவனங்களே இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் தேடலைப் பற்றி அறிய குக்கீஸ் களை அனுப்புகின்றன. இது உண்மைக்கு மாறான தகவல். 800க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலையில் ஈடுபடுகின்றன. Adfonic, Clicksor, or VigLink என்ற பெயர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை. ஆனால் அவை உங்களைப் பற்றி அறிந்திருப்பார்கள். இவை எல்லாம் இணையச் செயல் பாட்டினைக் கண்காணிக்கும் வகையில் (Web tracking) செயல்படுபவை.
2. இந்த கண்காணிக்கும் நிறுவனங்கள் உங்களைப் பற்றிய அனைத்து தகவல் களையும் அறிந்து வைத்துள்ளன. இது பொய். இத்தகைய குக்கீஸ் புரோகிராம்கள் உங்களைப் பின் தொடர்ந்து வருவது இல்லை. உங்கள் பிரவுசர்கள் இயங்கு வதைத்தான் கண்காணிக்கின்றன. அந்த பிரவுசரை மற்றவர்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பயன் படுத்துகையில் உங்களைப் பற்றி அறிய வாய்ப்பில்லையே. மேலும், நீங்கள் மற்றொரு பிரவுசரைப் பயன்படுத்து கையில் உங்கள் தேடல்கள் என்ன வென்று அறியவும் சந்தர்ப்பம் இல்லை. பொதுவாக இவை ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விருப்பத் தேடல்களை அறிவதில்லை. ஒவ்வொரு கம்ப்யூட்ட ருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பதிவு செய்து, அந்த எண்ணின் அடிப்படையில் தான் தகவல்களைச் சேகரிக்கின்றன.
3. இணையக் கண்காணிப்பு புரோகிராம் கள் உங்கள் தனிநபர் விருப்பங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இதில் பாதி உண்மை; பாதி உண்மை அற்றது. நீங்கள் இணையத்தில் கிளிக் செய்திடும் தளங்களுக்கான லிங்க்ஸ் பற்றி தகவல்கள் சேர்க்கப் படுகையில், உங்களின் தனி நபர் விருப்பங்கள் பட்டியலிடப்பட்டு தொகுக்கப்படுகின்றன. உங்களை அடையாளம் காட்டும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவையும் அவற்றின் வசம் கிடைக்கின்றன. எனவே ஓரளவிற்கு உங்கள் விருப்பங்களும் இந்த குக்கீஸ் மூலம், அவற்றை அனுப்பிய நிறுவனங்களுக்குச் செல்கின்றன. ஆனால் இந்த நிறுவனங்கள் தனிநபர் விருப்பங்களைப் பயன்படுத்துவதில்லை. எத்தகைய தகவல்கள் மற்றும் விளம்பரங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதை மட்டும் கணித்து அவற்றை வேண்டுவோருக்கு அளிக்கின்றன.
4. இவற்றைத் தடை செய்திட சட்டத்தில் இடம் உள்ளது. இது உண்மை அல்ல. இணையத்தில் இத்தகைய செயல்பாடு களைத் தடை செய்திடும் சட்டம் இல்லை. அப்படியே வேறு சட்டப் பிரிவுகளுக்குள் இந்த செயல்பாட்டினைக் கொண்டு வந்தாலும், இதனை நிரூபிப்பது கடினம்.
5. மொபைல் போனில் இருப்பது போல, எனக்கு விளம்பரங்கள் வேண்டாம் எனத் தடை செய்திட முடியுமா? அந்த வசதி இல்லை. இணையக் கண்காணிப்பில் இருந்து உங்களைப் பிரித்துக் கொள்ளும் வசதி இல்லை. ஆனால், இத்தகைய குக்கீஸ்களை அடையாளம் கண்டு கொண்டு, அவற்றை உங்கள் அனுமதி யுடன் நீக்கும் புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அவ்வப் போது இயக்கினால், நாம் இதிலிருந்து மீளலாம்.
6. இந்த கண்காணிக்கும் புரோகிராம்களைத் தடை செய்தால், இணையத்தில் விளம்பரங்கள் மறையும். வருமானம் குறைவதால், ஒவ்வொரு இணைய தளத்தினையும் பணம் செலுத்தித்தான் பார்க்க வேண்டும். இதுவும் தவறான ஒரு கருத்தாகும். இது விளம்பரங்களை அனுப்பிப் பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் இட்டுக் கட்டிய கதை. விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் நிறுவனங்களுக்கும் இன்டர்நெட் தொடர்ந்து இயங்குவதற்கும் அப்படிப்பட்ட ஓர் அடிப்படையான அமைப்பு இல்லை.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

திங்கள், 31 அக்டோபர், 2011

விண்டோஸ் டாஸ்க் மேனேஜரின் செயல்பாடு

விண்டோஸ் புரோகிராம் தரும் டாஸ்க் மேனேஜர் நமக்கு நல்ல சமயத்தில் உதவிடும் நண்பனாகும். புரோகிராம்களை இயக்குவதற்கும் நிறுத்து வதற்கும் இதில் வழி உண்டு. கம்ப்யூட்டரின் செயல்பாடு குறித்த புள்ளி விபரங்களையும் தகவல்களையும் சரியாக இதிலிருந்து பெறலாம். இதனை எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம்.
டாஸ்க் மேனேஜரை இயக்க, அதனைத் திறக்கக் கீழே கொடுத்துள்ள வழிகளில் ஒன்றைப் பயன்படுத்துங்கள்.
1. Ctrl Shift Esc கீகளை அழுத்துங்கள்.
2. டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Task Manager என்பதில் கிளிக் செய்திடுக.
3. Ctrl Alt Delete கீகளை அழுத்தி பெறுக.
டாஸ்க் மேனேஜர் விண்டோவில் ஐந்து டேப்கள் இருப்பதைக் காணலாம். இவற்றின் பயன்பாட்டினை இங்கு காணலாம்.
1. அப்ளிகேஷன்கள் (Applications): இதன் கீழ் உங்கள் கம்ப்யூட்டரில் அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்கள் (பணிகள்) காட்டப்படும். இதில் சிஸ்டம் ட்ரேயில் மினிமைஸ் செய்யப்பட்டிருக்கும், ஆண்ட்டி வைரஸ் போன்ற புரோகிராம்கள் காட்டப்பட மாட்டாது. இந்த டேப்பினைப் பயன்படுத்தி, இயங்கிக் கொண்டிருக்கும் இடைப் பொழுதில், உறைந்து செயலற்று நின்று போன, புரோகிராம்களை மூடலாம். அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, End Task பட்டனை அழுத்தினால் போதும். நம் கட்டளைகளுக்கு எந்தவித செயல்பாடும் காட்டாமல் அப்படியே நின்று போன புரோகிராம்களை மூட இது மிகவும் உதவும். ஆனால், அந்த புரோகிராம் மூலம் சேவ் செய்யப்படாத டேட்டா, பின்னர் நமக்குக் கிடைக்காது. எடுத்துக்காட்டாக, வேர்ட் புரோகிராமில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கையில், வேர்ட் இயங்காமல் போனால், அதன் இயக்கத்தினை டாஸ்க் மேனேஜர் மூலமாக முடிவிற்குக் கொண்டு வந்தால், இறுதியாக எப்போது சேவ் செய்தோமோ, அல்லது வேர்ட் செட் செய்தபடி எப்போது சேவ் செய்ததோ, அதுவரை மட்டுமே பைல் கிடைக்கும்.
2. இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் ஒன்றினை முன்னுக்குக் கொண்டு வர, அதனைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பின்னர், Switch To என்பதில் கிளிக் செய்திடவும்.
3. புதிய புரோகிராம் ஒன்றை இயக்க, முதலில் New Task. என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து புரோகிராமிற்கான கட்டளை வரியைத் தரவும். அல்லது Browse பட்டனில் கிளிக் செய்து, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து இயக்கவும். இது ஸ்டார்ட் மெனுவில் ரன் (Run) கட்டம் மூலம் இயக்குவதற்கு இணையானது.
2. ப்ராசெஸ்ஸஸ் (Processes): இங்கு இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து இயக்க பைல்களையும் காணலாம். ஏதேனும் ஒன்றை மூடினால், சேவ் செய்யப்படாத டேட்டா தொலையலாம். உறைந்து போன புரோகிராமின் செயல்பாட்டினையும் இதன் வழியாகவும் நிறுத்தலாம். ஆனால், நாம் எதனை நிறுத்த முயற்சிக்கிறோம் என்பதனைச் சரியாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கான கோப்பு எது என்று உணர்ந்திருக்க வேண்டும். சில வேளைகளில், இதனைச் சரியாக அறியாதோர், சிஸ்டம் பைல்களில் ஏதேனும் ஒன்றை நிறுத்தி விடுவார்கள். இதனால் சிஸ்டம் இயங்கு வதில் பிரச்னை ஏற்படலாம். எனவே, இதனைச் சரியாக அணுகுவது எப்படி எனப் பார்க்கலாம்.
1. அப்போது இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த, அப்ளிகேஷன்ஸ் டேப் கிளிக் செய்து, அதில் அந்த புரோகிராமின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர், கிடைக்கும் மெனுவில், Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். உடனே Process டேப் திறக்கப்பட்டு, அந்த புரோகிராமிற்கான இயக்க பைல் ஹைலைட் செய்து காட்டப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்த, End Process என்பதில் கிளிக் செய்திடவும். அப்ளிகேஷன்ஸ் டேப் அழுத்தி, ஒரு புரோகிராமின் இயக்கத்தினை நிறுத்த முடியாத போது, இந்த வழியைப் பின்பற்றலாம். Process ஒன்றில் ரைட் கிளிக் செய்து, பின்னர் End Process Tree என்பதில் கிளிக் செய்தால், அந்த இயக்கம் சார்ந்த அனைத்து பைல் இயக்கங்களும் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.
3. சர்வீசஸ் (Services): சர்வீசஸ் என்பவை, பின்னணியில் இயங்கும் சப்போர்ட் புரோகிராம்களாகும். இதில் பெரும் பாலானவை, கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போதே, இயங்கி பின்னணியில் செயல்படும்.
1.ஒரு சர்வீஸ் புரோகிராமினை இயக்க, நிறுத்தப்பட்ட சர்வீஸ் மீது ரைட் கிளிக் செய்து, பின்னர், Start Service என்பதில் கிளிக் செய்திடவும்.
2. ஒரு சர்வீஸை நிறுத்திட, இயங்கிக் கொண்டிருக்கும் சர்வீஸில் ரைட் கிளிக் செய்து, Stop Service என்பதில் கிளிக் செய்திடவும்.
3. சர்வீஸ் ஒன்றுடன் சார்ந்த இயக்கங்களைக் காண, அதன் மீது ரைட் கிளிக் செய்து, Go To Process என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம், ஒரு சர்வீஸ், கம்ப்யூட்டரின் பிற திறன் செயல்களை இயங்கவிடாமல் அழுத்திக் கொண்டுள்ளதா எனத் தெரியவரும்.
4. பெர்பார்மன்ஸ் (Performance): இந்த டேப் சிஸ்டம் இயக்கத்தின் பல்வேறு பிரிவுகளைக் காட்டும்.
1. மேலாக, சிபியு பயன்பாட்டினைக் காட்டும் மீட்டர் ஒன்று இயங்கியவாறு இருக்கும். அருகிலேயே CPU usage history line கிராப் ஒன்று காட்டப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வரைபட வரிகள் இருப்பின், அது சிபியுவின் பல செயல்பாடுகளைக் காட்டும்.
2. சிபியு பயன்பாடு மீட்டர் மற்றும் சிபியு பயன்பாடு லைன் கிராப் கீழாக, அதே போன்ற மெமரி பயன்பாட்டிற்கான அளவீடுகள் காட்டப்படும்.
3. இன்னும் கீழாகப் பார்த்தால், கம்ப்யூட்டர் இயக்கிக் கொண்டிருக்கும் பைல்கள் மற்றும் மெமரி பயன்பாடு ஆகியவை காட்டப்படும்.
5. நெட்வொர்க்கிங் (Networking): நெட்வொர்க் இயக்கத்திற்கான லைன் கிராப் இதில் காட்டப்படும். வரை வரிகள் கீழாக கூடுதல் புள்ளி விபரங்கள் காட்டப்படும்.
6. யூசர்ஸ் (Users): இந்த டேப்பில், கம்ப்யூட்டர் சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் அனைவரின் பட்டியல் காட்டப்படும்.
1. இதில் ஒரு யூசரை ஹைலைட் செய்து, Log off என்பதில் கிளிக் செய்தால், அந்த யூசரின் பயன்பாட்டு காலம் முடிக்கப்படும்.
2. ஏதேனும் ஒரு யூசரை கிளிக் செய்து, Disconnect என்பதில் கிளிக் செய்தால், பயனாளரின் பணிக்காலம் முடிக்கப் படும். ஆனால் அது மெமரியில் காத்து வைக்கப்படும். இதனால், பின்னர், அந்த பயனாளர், மீண்டும் லாக் ஆன் செய்து, தான் விட்ட பணியினைத் தொடரலாம்.
7. டாஸ்க் மேனேஜர் டிப்ஸ்: ப்ராசசஸ், சிபியு பயன்பாடு, மெமரி அளவு ஆகிய அனைத்தும் டாஸ்க் மேனேஜரின் கீழாகக் காட்டப்படும் தகவல்களாகும். இந்த மிக அடிப்படையான தகவல்கள், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் எவ்வளவு கடினமாகப் பணியாற்றிக் கொண்டிருக் கிறது அல்லது பணியே ஆற்றாமல் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதில் செயல்திறன் சார்ந்த எண்கள் அதிகமாக இருந்தால், பிரச்னைகளை அறியும் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.
1. கட்டளைக்குச் செயல்படாத அப்ளிகேஷன்களைக் கண்டறிய அப்ளிகேஷன்ஸ் டேப்பினைக் கிளிக் செய்திட வேண்டும்.
2. கம்ப்யூட்டரின் திறனை அதிகம் எடுத்துக் கொள்கிறதா என்பதனை அறிய ப்ராசசஸ் டேப்பினை செக் செய்திடலாம். ப்ராசஸ் ஒன்றினை முடிவிற்குக் கொண்டு வரும் முன், அது குறித்துத் தீவிரமாக அறியவும். இந்த வகையில் மெனு பாரில் உள்ள வியூ மெனு மூலமும் தகவல்களை அறியலாம். மேலதிகத் தகவல்களுக்கு அல்லது டாஸ்க் மானேஜர் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், டாஸ்க் மேனேஜரைத் திறந்து மெனு பாரில் Help என்பதில் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் விண்டோவில் Task Manager Help Topics என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பிரித்தறிந்து படிக்கவும்.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

வெள்ளி, 28 அக்டோபர், 2011

யூபண்டு (Ubantu) புதிய இயங்கு தளம்

கணினியில் புதுமையை தேடும் அன்பர்களே நீங்கள் பொதுவாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் இயங்குதளமான விண்டோஸ் எக்ஸ்பி ,விண்டோஸ் 7 போன்றவற்றை மட்டுமே அதிகம் உபயோகித்து இருப்பீர்கள் அனால் உங்களுக்காக இப்போது புதிய வடிவில் அனைத்து வசதிகளுடன் யூபண்டு (Ubantu) என்ற இயங்கு தளத்தை அறிமுக படுத்தியுள்ளது. இதனை இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்தி கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ய டவுன்லோடு பட்டனை கிளிக் செய்யவும் .
இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் 
  • சீரியல் நம்பர் தேவை இல்லை .
  • word ஆபீஸ்,பவர் பாயிண்ட் உள்ளது .
  • மோசில்லா பையர்பாக்ஸ்  பிரௌசர் உள்ளது.
  • ப்ளுடூத்,மொபைல் மோடம் போன்ற அனைத்து மென்பொருட்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரே திரையில் நான்கு விண்டோஸ்களையும் பார்க்கமுடியும்.
  • அதிகமான ஸ்க்ரீன் சேவர்கள் உள்ளன.
  • இதனை விண்டோஸ் இயங்குதளத்தில் உபயோகிக்க முடியும்.  
குறிப்பு :
இதன் குறைபாடு என்னவென்றால் விண்டோஸ் -ல் மென்பொருளை நாமே நிறுவமுடியும் ஆனால் யூபண்டு (Ubantu)வில் அவ்வாறு செய்ய முடியாது .
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கம்ப்யூட்டர் திரைக் காட்சி முடக்கம் இதனை எப்படி சரி செய்வது?

பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில்
Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start Settings Control Panel System Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக் கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளே யின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start Settings Control Panel Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக் கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர் பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரி யைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப் பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப் பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப் பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

வெள்ளி, 21 அக்டோபர், 2011

எக்ஸெல் வரிசை வகை மாற்றம்

எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசை யிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?
எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது. எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள். அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள். பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

செவ்வாய், 18 அக்டோபர், 2011

எம்.எஸ். பெயிண்ட் புரோகிராம்

படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும் படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன் தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள் ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.
எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவு களில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரியவேண் டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.
அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம்.
இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக்காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா? Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப்படாதீர்கள். செய்து பாருங்கள்.
படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப் படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.
ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இது போல வேடிக்கையான செயல்களையும், பொறுப்பான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open என்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீது கிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம்.
உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்துவிட்டீர்களா? சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG, அல்லது .GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.


நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

பயாஸ் அமைப்பில் நுழைதல்

கம்ப்யூட்டரின் அடிப்படை உள்ளீடு /வெளியீடு கட்டமைப்பினையே பயாஸ் (BIOS basic input/output system) என்கிறோம். இந்த கட்டமைப்பினைக் கொண்டுள்ள சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்று இயங்கத் தொடங்குகையில், அதில் உள்ள, இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் (ஹார்ட்வேர், சவுண்ட்கார்ட், கீ போர்ட், மவுஸ் போன்றவை) அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்து, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இயக்க அனுமதிக்கிறது. இந்த ஹார்ட்வேர் சாதனங்களுக்கான சோதனையை POST– poweron selftest என அழைக்கிறோம். இந்த சோதனை முடிவு சரியாக இருந்தால் தான், இந்த சாப்ட்வேர் புரோகிராம், கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டினை ஆப்பரேட்டிங் சிஸ்டத்திடம் ஒப்படைக்கும்.
ஒவ்வொரு பெர்சனல் கம்ப்யூட்டரிலும் ஒரு பயாஸ் சிஸ்டம் இருக்கும். சில வேளைகளில் இந்த சிஸ்டத்தினையும் நாம் திறந்து பார்த்து, அதில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்த பயாஸ் உள்ளாக, ஒரு பாஸ்வேர்டை செட் செய்திடலாம்; ஹார்ட்வேர் சாதன நிர்வாகத்தினை அமைத்திடலாம்; கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்யப்பட வேண்டும் என்பதனை நிர்ணயம் செய்திடலாம்.
பயாஸ் புரோகிராமிற்கான இன்டர்பேஸ் விண்டோவினை எளிதாக நாம் அணுகி அதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், மிக எச்சரிக்கையுடன் மட்டுமே பயாஸ் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். எனவே மாற்றங்களை ஏற்படுத்துகையில், அதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியவில்லை என்றால், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது.
பயாஸ் அமைப்பில் நுழைந்திட என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம். கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடனேயே, பயாஸ் தன் சோதனையை மேற்கொண்டு, விண்டோஸ் சிஸ்டத்திடம் பொறுப்பை ஒப்படைக்க சில விநாடிகள் தான் எடுத்துக் கொள்ளும். எனவே பயாஸ் அமைப்புக்குள் நுழைய விரும்பினால், விரைவாக அதனை நிறுத்தி நுழைய வேண்டும். இதற்கான வழியைப் பார்க்கலாம்.
கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன் முதல் திரை காட்டப்படும். அதில் எந்த கீயை அழுத்தினால், பயாஸ் அமைப்பிற்குள் நுழையலாம் என்று காட்டப்படும். அது F1, F2, or F3 ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். Esc அல்லது Delete அல்லது கீயாக இருக்கலாம்.
சில கம்ப்யூட்டர்களில் இந்த கீகளுடன் இன்னொரு கீயினைச் சேர்த்து அழுத்த வேண்டியதிருக்கலாம். எனவே முதலில் காட்டப்படும் பக்க செய்தியைக் கவனமாகக் காணவும். அந்த செய்திகள் கீழ்க்குறிப்பிட்டவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.
‘Press F1 to enter setup’
‘BIOS settings: Esc’
‘Setup = Del’
‘System configuration: F2'

இதனை முதல் முயற்சியிலேயே பார்க்க இயலாவிட்டால், மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்து காணவும். பயாஸ் அமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு முன், ஏற்கனவே உள்ள செட்டிங்ஸ் குறித்து ஒரு தாளில் குறித்துக் கொள்ளவும். அல்லது பயாஸ் விண்டோவின் ஸ்கிரீன் ஷாட் ஒன்றை எடுத்துவைத்துக் கொள்ளவும். அதன் பின் மாற்றங்களை மேற்கொள்ளலாம். பொதுவாக, கம்ப்யூட்டர் எந்த சாதனங்கள் வழியாக பூட் செய்வது என்று அமைப்பதுதான் இதில் பலரும் மேற்கொள்ளும் வேலையாக இருக்கும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஹார்ட் டிஸ்க்கில் அமைக்கப்படுவதால், முதலில் ஹார்ட் டிஸ்க் வழியாகப் பூட் செய்திடும்படி அமைப்போம். இதில் பிரச்னை ஏற்பட்டால், சிடியில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வைத்துக் கொண்டு, முதலில் சிடி வழியாக ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தேடும் வகையில் அமைக்கலாம். எந்த மாற்றங்களை ஏற்படுத்தினாலும், பயாஸ் விண்டோவினை விட்டு வெளியேறுகையில், மாற்றங்களை சேவ் செய்திட வேண்டும். இதற்கெனக் காட்டப்படும் மெசேஜ் விண்டோவினைப் பார்த்துச் சரியான கீகளை அழுத்தி சேவ் செய்திட வேண்டும். சேவ் செய்த பின்னர், இந்த மாற்றங்களை இயக்க, மீண்டும் ஒரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்திட வேண்டும். 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

திங்கள், 17 அக்டோபர், 2011

மெமரி பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விண்டோஸ் 8

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த மைக்ரோசாப்ட் வலைமனையில், தொடர்ந்து இந்த சிஸ்டம் செயல்படும் விதம் குறித்து செய்திகள் தரப்பட்டு வருகின்றன.
அண்மையில், இந்த சிஸ்டத்தில் எப்படி கம்ப்யூட்டர் ஒன்றின் ராம் மெமரி நிர்வகிக்கப்படுகிறது என்பது விளக்கப் பட்டுள்ளது.
முதலாவதாக மெமரி கம்பைனிங் (memory combining) என்ற வழிமுறை செயல்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்தில், ஒவ்வொரு அப்ளிகேஷன் புரோகிராம் இயங்கும் போதும் ராம் நினைவகத்தில் இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மெமரி கம்பைனிங் செயல்பாடு, ராம் மெமரி இடத்தைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து, ஒரே அப்ளிகேஷன் புரோகிராம், ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் இயக்கத்திற்கு வந்து, அத்தனை முறை மெமரியைப் பயன்படுத்தி இருந்தால், அதனை விடுவிக்கிறது. இதன் மூலம் 10 முதல் 100 மெகா பைட் அளவில் மெமரி கிடைக்கும்.
விண்டோஸ் சிஸ்டம் தரும் சில சேவைகளுக்கான புரோகிராம்கள் இயங்க ராம் மெமரியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இத்தகைய 13 சேவை புரோகிராம்கள் இயங்குவது நிறுத்தப் பட்டுள்ளன. சில நாமாக இயக்கும்படி மாற்றப்பட்டுள்ளன. சில சேவை புரோகிராம்கள் “Start on Demand” என்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக, விண்டோஸ் இயக்கத்தில் அதிகம் பயன்படுத்தப் படாமல் இயங்கும் சில புரோகிராம்கள், தனித்தனியாக இயங்குகையில் அதிக இடம் எடுத்துக் கொண்டன. இவற்றை ஒன்றாக்கிக் குறைந்த அளவில் ராம் மெமரியினை எடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
எந்த புரோகிராம்களுக்கு ஒதுக்கப்பட்ட மெமரியை வைத்துக் கொள்வது, எவற்றை நீக்குவது என்ற வழியை விண்டோஸ் 8 ஒரு புதிய வழிமுறை மூலம் மேற்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்று பைல் ஒன்றைத் திறக்கையில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அதனைச் சோதனை செய்திட ராம் மெமரியில் இடம் எடுத்துச் செயல்படுகிறது. இதனை ஒருமுறை மேற்கொண்டால் போதும். எனவே அடுத்த முறை இந்த சோதனைக் கான ராம் மெமரி இடம் சேமிக்கப்பட்டு, இடம் தேவைப்படும் மற்ற புரோகிராம்களுக்குத் தரப்படுகிறது.
மேலே சொல்லப்பட்ட வழிமுறைகள் போல இன்னும் சிலவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நிர்வாக நடைமுறைகளாக வர இருக்கின்றன. இவற்றின் இயக்கத்தால், 1 அல்லது 2 ஜிபி ராம் மெமரி இடம் கொண்ட கம்ப்யூட்டர் களில், ராம் மெமரி தேவையானதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு, கம்ப்யூட்டர் இயக்கத்தில் மந்த நிலை ஏற்படாது. ஏற்கனவே, விண்டோஸ் 7 சிஸ்டம் இயங்க குறைந்தது 404 எம்பி ராம் எடுத்துக் கொண்ட நிலையில், விண்டோஸ் 8 சிஸ்டம் 281 எம்பி மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளது. எனவே ராம் மெமரி இடம் இல்லாததனால், அப்ளிகேஷன்கள் இயங்குவது தாமதமாகின்றன என்ற குறை இனி இருக்காது.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

பயர்பாக்ஸ் 8 சோதனை பதிப்பு

பயர்பாக்ஸ் பதிப்பு 7 வெளியான சில நாட்களிலேயே, பதிப்பு 8ன் சோதனைத் தொகுப்பினை மொஸில்லா வெளியிட் டுள்ளது. இதில் சில புதிய வசதிகளும், ஏற்கனவே தரப்பட்டுள்ள சிலவற்றின் மேம்படுத்தல்களும் தரப்பட்டுள்ளன. பிரவுசரின் டூல்பாரில் தரப்பட்டுள்ள தேடல் இஞ்சின்களில் ட்விட்டர் சேர்க்கப் பட்டுள்ளது.
மொஸில்லா தளத்தில் தரப்படுத்தப் பட்டு இல்லாத ஆட் ஆன் தொகுப்புகளை முதன் முதலாகப் பயன்படுத்துகையில் இப்போது எச்சரிக்கை தரப்படுகிறது. டேப்களைக் கையாள்வதில் புதிய வழிமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பிரவுசர் இயக்கத்தினைத் தொடங்கு கையில், நாம் தேர்ந்தெடுத்த டேப்களுக்கான தளங்கள் மட்டுமே தயார் நிலையில் வைக்கப்படும்.
இதனால், பிரவுசர் மூடப்படுகையில் பல டேப்களை சேவ் செய்து வைத்திருந்தாலும், மீண்டும் திறக்கப்படுகையில், அது இயக்க நிலைக்கு வரும் நேரம் கணிசமாகக் குறையும்.
இணைய தளம் உருவாக்கு பவர்களுக்கு இந்த பதிப்பில் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.
இனி புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வருமுன், அது மூன்று நிலைகளில் இயக்கப்படும். முதல் ஆறு வாரங்களுக்கு அது “Aurora” என்ற நிலையில் வைக்கப்படும். பின்னர் அதன் சோதனை பதிப்பு (Beta) கிடைக்கும். அடுத்த ஆறு வாரத்தில் அதன் முழுமையான புதிய பதிப்பு தரப்படும். பதிப்பு 8 நவம்பர் 8ல், வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

சனி, 15 அக்டோபர், 2011

இலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள்

இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன்படுத்திப் பார்ப்பது என் பழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் தரப்பட்ட இரண்டு புரோகிராம்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்கவும் மிக எளிதாகவும் உள்ளன. வேகமாகவும் செயல்படுகின்றன.
ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராம் ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.
இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.
இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.
பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.
இதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம் http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது. டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது. இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.
இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.
Download Audio converter Free Download
Download Video converter Free Download
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது

சென்ற செப்டம்பர் 27ல் கூகுள் தன் 13 வது பிறந்த நாளைக் கொண்டாடியது. ஏதேனும் சிறப்பு பெற்ற நாளாக இருந்தால், அதற்கேற்ற வகையில் தன் கூகுள் இலச்சினையை வடிவமைத்து வழங்குவது கூகுள் தேடுதளத்தின் சிறப்பாகும். இதனைத் தன் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கூகுள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டில், தன் பெயரான கூகுள் என்ற சொல்லுக்குப் பின்னர் ஓர் ஆச்சரியக் குறியினை அமைத்து டூடுலாகக் (Doodle) காட்டியது கூகுள் நிறுவனம். (ஆங்கிலத்தில் Doodle என்பது, பொறுப்பின்றி எதனையேனும் கிறுக்கலாக அமைக்கும் சொல்லைக் குறிக்கும்.) அத்துடன் இலச்சினையே மறைக்கும் அளவிற்கு பிறந்தநாள் கேக், அன்பளிப்புகள், தொப்பிகள் மற்றும் பலூன்கள் இருந்தன. இனி, கூகுள் நடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.
1998: கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 27ல் கொண்டாடினாலும், செப்டம்பர் 15 அன்று தான், கூகுள் தளத்தின் இணையப் பெயர் பதியப்பட்டது. நிறுவனமாக உருவானது செப்டம்பர் 4. இரண்டு முறை இந்த இரண்டு தேதிகளை விலக்கி, கூகுள் தன் பிறந்த நாளை செப்டம்பர் 7ல் கொண்டாடியது. தன் தளத்தில் இதனை ஒரு டூடுலாக அமைத்தது அதன் நான்காவது பிறந்த நாள் (2002) கொண்டாடிய போதுதான். Larry Page and Sergey Brin ஆகிய இருவர் தான், இந்நிறுவனத்தை ஒரு கார் ஷெட்டில் ஆரம்பித்தனர். சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தை நிறுவியர்களில் ஒருவர், இதில் ஒரு லட்சம் டாலர் தொடக்க முதலீடாகத் தந்தார்.
1999: சில மாதங்களே கார் ஷெட்டில் கூகுள் இயங்கியது. ஜூன் 1999ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக, 2 கோடியே 50 லட்சம் டாலர் மூலதன நிதியைக் கொண்டதாக கூகுள் வளர்ந்தது.
2000: அதிசயப்படத்தக்க வகையில், கூகுள் நிறுவனத்திற்குப் போட்டியாக இயங்கிய யாஹூ நிறுவனம், கூகுளின் சர்ச் இஞ்சினைப் பயன்படுத்தப்போவதாக அறிவித்து செயல்படுத்தியது. கூகுள் தளத்தைத் தேடலுக்குப் பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை, ஒரு நாளில் 10 கோடியைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து தனக்கு வருமானம் ஈட்டித் தரும் AdSense புரோகிராமினைக் கூகுள் தொடங்கியது.
2001: கூகுள் ஒரு பன்னாட்டு நிறுவனமாக இயங்கத் தொடங்கியது. முதல் முதலாக ஜப்பானில், டோக்யோவில் தன் அலுவலகக் கிளையைத் தொடங்கியது. Eric Schmidt இதன் தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்று, நிறுவனத் தை வளர்ச்சியில் இமாலய மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
2002: புதிய சேவைகளை இணைத்து இலவசமாகவே வழங்கும் Google Labs தொடங்கப்பட்டது. ஷாப்பிங் தேடல்களுக்கு Froogle உருவானது. தொடர்ந்து Google News தொடங்கப் பட்டது.
2003: பைரா லேப்ஸ் (Pyra Labs) நிறுவனத்தினை வாங்கி, வலைமனை (Blogs) வசதியைத் தரத் தொடங்கியது. இப்போது கூகுள் புக் சர்ச் (Google Book Search) என்று அழைக்கப்படுகின்ற கூகுள் பிரின்ட்ஸ் வசதி தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான நூல்கள் அதன் டிஜிட்டல் வடிவில் இலவசமாகக் கிடைத்தன.
2004: கூகுளின் தேடல் அட்டவணை பொருட்களின் எண்ணிக்கை (Search Index) 800 கோடியைத் தாண்டியது. கூகுள் ப்ளெக்ஸ் என்ற தன் சொந்தக் கட்டடத்திற்கு கூகுள் தன் அலுவலகத்தினை மாற்றியது. இந்த ஆண்டில் கூகுள் மேற்கொண்ட சிறப்பான மாற்றம், இணைய மெயில் வசதியான, ஜிமெயில் தளத்தைத் தன் ரசிகர்களுக்கு வழங்கியதுதான். இமெயில் சந்தையில் மட்டுமின்றி, மனித குல வரலாற்றிலும், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
2005: கூகுள் மேப்ஸ் மீது தன் கவனத்தை கூகுள் திருப்பியது. அத்துடன் கூகுள் ரீடர் மற்றும் கூகுள் அனலிடிக்ஸ் என்ற இரு வேறு வசதிகளும் அறிமுகமாயின. Gmail, Blogger and Search ஆகியவற்றின் மொபைல் பதிப்புகளுக்கும் அடிப்படை அமைக்கப்பட்டது.
2006: யு-ட்யூப் வசதியை வாங்கியது கூகுள் நிறுவனம். கூகுள் மேப்ஸ் விரிவு படுத்தப்பட்டது. கூகுள் டாக்ஸ், ஜிமெயில் ஆகியவற்றின் வாடிக்கையாளர் எண்ணிக்கை புயல் வேகத்தில் உயர்ந்தது. கூகுள் மேப்ஸ் உடன் இணைந்து, கூகுள் தெரு நிலை போட்டோ சேவையினை வழங்கியது.
2008: ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுடன் போட்டியிடும் வகையில், மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது. குரோம் பிரவுசரை வெளியிட்டு, பிரவுசர் யுத்தத்தில் முன்னிலை இடம் பிடித்தது.
2009: தேடல், பிரவுசர் மற்றும் ஜிமெயில் மட்டுமின்றி, கம்ப்யூட்டர் பயன்படுத்து பவர் அனைவரையும் மடக்கிப் பிடிக்க, தன் குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட்டது கூகுள்.
2010: இணைய வெளியில் நீட்டத் தொடங்கிய தன் கரங்கள் தரும் சேவையினைப் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு, ஒரு மிகப் பெரிய பலவானாக கூகுள் மாறியது.
2011: மோட்டாரோலா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, தன் நிறுவனத்தின் சேவைத் தளத்தில் பெரிய விரிவாக்கத்தினை கூகுள் ஏற்படுத்தியது.
கடந்த 13 ஆண்டு காலத்தில், அனைத்து மக்களின் வாழ்வை எளிதாகவும், பொருள் பொதிந்ததாகவும் மாற்றுவதில் கூகுள் மிகப் பெரிய அளவில் உழைத்துள்ளது. ஒரு சில தவறுகளை கூகுள் ஏற்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவை தன்னைத் திருத்திக் கொள்ள ஏற்பட்டவையாக கூகுள் ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பல வசதிகளை மனித இனத்திற்குத் தந்துள்ளது. "கெட்டதாக இருக்காதே, கெட்டவற்றிற்குத் துணை போகாதே' (“Don’t be evil”) என்ற தன் இலட்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் தன் நேரம் பலம் அனைத்தையும் கூகுள் செலவழித்து வெற்றியும் கண்டுள்ளது. இந்த வெற்றி இனியும் தொடரும் என்ற நம்பிக்கை கூகுள் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, நமக்கும் ஏற்பட்டுள்ளது. வளரட்டும் கூகுள்! வாழ்த்துவோம் அதனை. 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

சிக்கிய சிடியை வெளியே எடுப்பது எப்படி?

நீங்கள் அடிக்கடி சிடி பயன் படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள். ஆம், உங்கள் சிடி கம்ப்யூட்டரின் சிடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை சிடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் சிடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கலவரப் படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சிடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும். இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சிடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சிடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும். இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சிடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சிடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சிடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது. இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும். உடனே சிடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சிடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள். இதற்கும் திறக்கவில்லை என்றால் அடுத்த வழிக்குச் செல்வோம்.
வழி 3: உங்கள் கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடுங்கள். மின்சாரம் வரும் வயர்களை கம்ப்யூட்டர் சிபியுவில் இருந்து நீக்கிவிடுங்கள். இல்லை என்றால் இந்த வழியில் உங்கள் கம்ப்யூட்டர் சிபியு மற்றும் உங்களையே நீங்கள் காயப்படுத்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஷட் டவுண் செய்து மின் இணைப்பை எடுத்துவிட்டீர்களா! இனி தட்டையாக உள்ள ஒரு ஸ்குரூ டிரைவரை எடுங்கள். சிடி டிரைவின் கதவின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீள இடைவெளியில் மெதுவாக அதனை வைத்து கொஞ்சம் மிகக் கொஞ்சம் தள்ளவும். ஸ்குரூ டிரைவரின் தட்டை முனையின் பகுதி சிறிய அளவில் உள்ளே சென்று விட்டால் அப்படியே டிரைவின் கதவை இழுக்கவும். டிரைவ் முழுவதும் பிளாஸ்டிக்கால் ஆன சிறிய சக்கரங்கள் மற்றும் கியர்கள் இயங்குவதால் நீங்கள் இழுப்பது தானாக வர வேண்டும். பலத்தை உபயோகிக்கக் கூடாது. மின்சக்தி மூலம் இயங்குவதை நீங்கள் இப்போது பலத்தை உபயோகித்து செயல்படுத்துகிறீர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனி மெதுவாக இழுத்தால் டிரைவ் கதவு திறக்கப்படும். சிடியை எடுத்துவிட்டு டிரைவை ஒரு சோதனைப் பார்வை பார்க்கவும். நிச்சயம் அதில் ஏகப்பட்ட தூசு, ஏன் சிறிய முடி கூட இருக்கலாம். இதனை எல்லாம் ஒரு சிறிய மெல்லிதான் பிரஷ் கொண்டு சுத்தப்படுத்துங்கள். போகாத பிடிவாத அழுக்கு என்றால் கொஞ்சம் ஈரம் கலந்த துணி கொண்டும் சுத்தப்படுத்தலாம். இனி மீண்டும் கம்ப்யூட்டருக்கு மின் சக்தி கொடுத்து இயக்குங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகி நிலைக்கு வந்தவுடன் சிடி டிரைவின் எஜக்ட் பட்டனை அழுத்தி கதவு திறந்து மூடுவதனை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.
சரி, இந்த ஸ்குரூ டிரைவர் வைத்தியத்திற்கும் கதவு திறக்கவில்லை என்றால் என்ன செய்வது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். என்ன செய்யலாம்? மின் இணைப்பைத் துண்டித்து சிபியு உள்ளாக டிரைவை இணைத்திருக்கும் கேபிள்களை நீக்கி பின் டிரைவ் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்குரூகளை எடுத்துவிட்டு டிரைவைத் தனியாக எடுத்து டிரைவின் கதவைத் திறக்கலாம். அல்லது டிரைவை மட்டும் தனியே எடுத்து இவற்றை ரிப்பேர் செய்திடும் இடத்திற்குக் கொண்டு சென்றால் அவர்கள் சரியான முறையில் சிடியை எடுத்துத் தருவார்கள். அதன்பின் புதிய டிரைவ் ஒன்றை வாங்கி இணைப்பது இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்கும்.


நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

விரல்கள் மீட்டும் விண்டோஸ் 8

கம்ப்யூட்டர் வரலாற்றில், இனி புதிய திருப்பு முனையைக் கொண்டு வரும் என எதிர்பார்த்த விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், சென்ற செப்டம்பர் 13 அன்று, புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. ஐகான்களுக்குப் பதிலாக ஓடுகள் வடிவிலான கட்டங்கள், மவுஸ் கிளிக் இடத்தில் விரல் தொடுதல், மெனுக்கள் போல்டர்கள் என்று அடுக் கடுக்கான குகைக் கட்டங் களுக்குப் பதிலாக, பொருள் புதைந்த பெரிதாக்கும் வசதி எனப் பல புதிய சிறப்பம்சங்கள், பயனாளர் களைப் புதிய உலகிற்கு அறிமுகப்படுத்தும் வகையில் உள்ளன. மைக்ரோசாப்ட் தளத்தில் யார் வேண்டுமானாலும் இதனை டவுண் லோட் செய்து, சோதனை செய்து பார்த்திடலாம்.
இதில் பல சிறப்பு அம்சங்கள் அறிமுகமாகியுள்ளன. அவை பயனாளர்களுக்கு புதிய வசதிகளைத் தருவனவாக மட்டுமில்லாமல், தொழில் நுட்ப வல்லுநர்களைப் புதிய வழிமுறைகளுக்கு அழைத்துச் செல்வதாகவும் உள்ளன.
முதலாவதாக, இன்டெல் மற்றும் ஏ.ஆர்.எம். என இரண்டு நிறுவன சிப்களிலும் விண்டோஸ் 8 இயங்கும். இதன் மூலம் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, ஐ-பேட் வகை டேப்ளட் பிசிக்களிலும் பயன் படுத்தலாம். இது ஸ்மார்ட் போன்களில் இயங்காது; ஆனால் விண்டோஸ் 7 போனில் இயங்கும்.
ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கும் விண்டோஸ் 8 டேப்ளட் பிசிக்கள், புதிய புரோகிராம்களை மட்டுமே இயக்கும். ஆனால், பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப் பில் வடிவமைக்கப்படும் புதிய புரோகிராம்கள் மட்டுமின்றி, ஏற்கனவே விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கி வந்த புரோகிராம் களையும், விண்டோஸ் 8 இயக்கும். ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கு கையில், பழைய விண்டோஸ் அப்ளிகேஷன்கள் இயங்காது.
இதனுடைய யூசர் இன்டர்பேஸ் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஐகான்கள் நிறைந்த திரைக்குப் பதிலாக, ஓடுகள் பதிக்கப்பட்ட ஒரு சுவராக திரை காட்டப்படும். ஒவ்வொரு கட்டத்திலும் live data, application screens, communications screens போன்றவை இருக்கும். இவற்றின் மீது தொட்டாலோ, கிளிக் செய்தாலோ, அவற்றிற்கான திரை மேலும் விரிந்து அப்ளிகேஷன்களைக் காட்டிப் பயனாளரை அழைக்கும். இதனை மெட்ரோ (Metro) யூசர் இன்டர்பேஸ் என மைக்ரோசாப்ட் பெயரிட்டுள்ளது. விண்டோஸ் 7 போனுக்கென அமைக்கப் பட்ட வடிவமைப்பில் பெரும்பகுதி இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொடுதிரை வழி உள்ளீடு செய்திடும் வகையில் இது உள்ளது என்றாலும், வழக்கம் போல கீ போர்டு மற்றும் மவுஸ் வழியிலும் இதனை இயக்கலாம். இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் சினோப்ஸ்கி கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தொடுதிரைப் பயன்பாடு அனைத்திலும் நுழைந்துவிட்டது. ஓர் இடத்தில் இருந்து இயக்காமல், எங்கும் எடுத்துச் சென்று இயக்கும் செயல் வேகம் கையாளப் படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் வடிவம் அளித்திட முடிவு செய்து, விண்டோஸ் 8ல் இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடுதிரை தொழில் நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதால், ஆக்ஸில ரோமீட்டர், என்.எப்.சி. தகவல் தொடர்பு போன்றவை சிறப்பாக இயங்கும். அத்துடன் வை-பி, 3ஜி நெட்வொர்க், பிரிண்டிங் ஆகியன ஒன்றோடொன்று இணைந்து இயக்கப்படும். ஸ்டோரேஜ், விண்டோஸ் லைவ் க்ளவுட் சேவை ஆகியனவும் இணைந்து இயங்கும்.
விண்டோஸ் 7 சிஸ்டம் 404 எம்பி இடத்தை ராம் மெமரியில் எடுத்தது. ஆனால் விண்டோஸ் 8, 281 எம்பி இடத்தையே கொண்டுள்ளது.
இதுவரை எச்.டி.எம்.எல். தொழில் நுட்பம் கொண்டிராத இன்டர்நெட் எக்ஸ்புளோரர், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வருகையில், அதனையும் கொண்டிருக்கும்.
புரோகிராம்களை வடிவமைப்பவர் களுக்கு, இந்த முறை அதிக ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மொழி யினைத்தான் அல்லது தொழில் நுட்பத்தினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றில்லாமல், பலவகை ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. C#, XAML, மற்றும் HTML5 என எதனையும் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் 256 டெரா பைட் அளவுள்ள ஹார்ட் டிஸ்க் வரை எதிர் கொண்டு சப்போர்ட் செய்திடும்; மொபைல் போன் செயல்பாடு போல, மின்சக்தியை மிச்சப்படுத்த பல வழிகள் தரப்பட்டுள்ளன. வீடியோ கான்பரன்சிங் வசதிக்கென கேமரா இதில் பதிக்கப்பட்டு இயங்கும்.
ஓடுகளால் ஆன இந்தக் கட்டங்கள், ஐகான்களைக் காட்டிலும் அதிக தகவல் தருபவையாக இருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் அது சார்ந்த புரோகிராம் களின் தகவல்கள் அப்டேட் செய்யப் பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக, சீதோஷ்ண நிலை குறித்த அப்ளிகேஷன் அப்போது என்ன தட்ப வெப்ப நிலை என்று காட்டும். இமெயில் புரோகிராம் உள்ள கட்டம் எத்தனை இமெயில்கள் புதியதாய் உள்ளன என்று சொல்லும். நம் பயன்பாட்டிற்கு ஏற்றபடி இந்த கட்டங்களை இழுத்துப் போட்டு இணைக்கலாம். எடுத்துக்காட்டாக, நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒரு குழுவாக அமைக்கலாம்.
சமுதாய உறவு தரும் தளங்களை இணைக்கலாம்; கேம்ஸ் மட்டும் ஒரு கட்டத்தில் கொண்டு வரலாம். இதனாலேயே, இந்தக் கட்டங்களை விரித்துப் பார்ப்பதை மைக்ரோசாப்ட் “semantic zooming” என அழைக்கிறது. எந்த அப்ளிகேஷன் எங்கு உள்ளது என்பது மறந்து போனால், search மூலம் தேடி அறியலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கத் தொடங்கியவுடன் கிடைக்கும் திரையில், அப்போதைய நேரம், தேதி, தனிநபர் தகவல்கள், புதிய இமெயில் எண்ணிக்கை, செயல்படுத்த வேண்டிய அடுத்த அப்பாய்ண்ட்மெண்ட் எனப் பல தகவல்கள் காட்டப்படுகின்றன. தொடர்ந்து பயன்படுத்த, பயனாளர் யார் என அறியும் சோதனைப் பல வழிகளில் மேற்கொள்ளப்படுகிறது. வழக்கம்போல பாஸ்வேர்ட், எண்களால் ஆன தனி நபருக்கான எண் தொகுதி, படமாக அமைந்த பாஸ்வேர்ட் எனப் பல வழிகள் உள்ளன. பட பாஸ்வேர்ட் எனில், அறிந்த படம் ஒன்று புள்ளிகளால் தரப்பட்டு, பயனாளர் இணைப்பதற்குக் காத்திருக்கிறது. தங்கள் விரல்களால் இவற்றைச் சரியாக இணைத்தாலே, கம்ப்யூட்டரை இயக்க வழி கிடைக்கிறது.
தன் ஆபீஸ் தொகுப்புகளில் உள்ள ரிப்பன் மெனுவினை மீண்டும் விண்டோஸ் 8ல் தந்துள்ளது மைக்ரோசாப்ட். ஆனால் இதில் நிறைய கூடுதல் வசதிகள் உள்ளன. குறிப்பாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில், மெனு மாற்றி மெனு செல்லாமல், பைல்களைத் தேடிப் பெற முடியும்.
புதிய பி.டி.எப். ரீடர் ஒன்று “Modern Reader” என்ற பெயரில் தரப்படுகிறது. அதே போல, டாஸ்க் மானேஜர் மாற்றி அமைக்கப்பட்டு “Modern Task Manager” எனப் புதியதாக ஒன்று இயக்கப்படுகிறது.
மைக்ரோசாப்ட் தந்துள்ள இன்னொரு உறுதி மொழியை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். விண்டோஸ் 8 சிஸ்டம் இயக்க ஹார்ட்வேர் தேவைகள் எதுவும் அதிகரிக்கப்படவில்லை. விண்டோஸ் 7 இயங்கிக் கொண்டிருக்கும் எந்தக் கம்ப்யூட்டரிலும் விண்டோஸ் 8 இயங்கும். சற்றுக் குறைவான அளவில் ஹார்ட்வேர் அமைப்பு இருந்தாலும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விண்டோஸ் 8 தற்போதைய பயனாளர்கள் அனைவராலும் மேற்கொள் ளப்படும் என எதிர்பார்க் கலாம்.
மைக்ரோசாப்ட் தளத்தில் புரோகிராம் டெவலப்பர்களுக்காகவும், சோதனை செய்து பார்ப்பவர்களுக்காகவும் விண்டோஸ் 8 கிடைக்கிறது.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

இணையத்தில் சிறுவர்களைக் காத்திட

இளம் மாணவர்களுக்கு அரசு லேப்டாப் கம்ப்யூட்டர் களை வழங்கி வருகிறது. அரசு தரும் கம்ப்யூட்டரில் இணைய இணைப்பு வசதி இலவசமாக இல்லை என்றாலும், நிச்சயம் பெற்றோர்கள் அவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாய கரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன. இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது. மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர் களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட. பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம், வீடுகளில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில், இணையத்தில் பெற்றோர் கட்டுப்பாடு விதிக்க உதவுகிறது. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள இணையத்தை உங்கள் கட்டுப்பாட்டிலேயே, நீங்கள் அருகில் இல்லாத சூழ்நிலையிலும், வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும் இதன் சிறப்பம்சங்களாவன:
பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.
குழந்தைகளின் வயதின் அடிப்படை யில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம்.
அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம்.
குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.
"எப்போதும் அனுமதி' மற்றும் "எப்போதும் தடை செய்திடு' என இருவகைகளாக இணைய தளங்களைப் பிரித்து அமைக்கலாம்.
பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட், மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம்.
தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம்.
விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகை யிலும் இது தரப்படுகிறது.
K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது. இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முயற்சிக்கையில் லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும். லைசன்ஸ் கீயினை இலவசமாக, http://www1.k9web protection.com/getk9webprotectionfree என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பெற்றுக் கொண்டு பயன்படுத்தலாம்.
இதே இணைய பாதுகாப்பு ஐ-போன், ஐ-பாட் டச் மற்றும் ஐ-பேட் ஆகிய சாதனங்களில் பயன்படுத்தும் வகை களிலும் கிடைக்கிறது. இவற்றிற்கான அப்ளிகேஷன் ஸ்டோர்களில் k9 என டைப் செய்து தேடிப் பார்த்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

மின்சாரம் மிச்சப்படுத்த

கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், சில வேளைகளில், அப்படியே விட்டுவிட்டு வேறு வேலை களுக்குச் செல்ல வேண்டியதிருக்கும். இது போன்ற சந்தர்ப்பங்களில், கம்ப்யூட்டர் அதிக நேரம் பயன்படுத்தப்படப் போவதில்லை என்று எண்ணினால், அது பயன்படுத்தும் மின்சக்தியைப் பெரும் அளவில் குறைத்து, மின்சக்தி வீணா வதனைத் தடுக்கலாம். நீங்கள் பயன் படுத்துவது விண்டோஸ் எக்ஸ்பி எனில், ஸ்லீப் மோட் (Sleep mode/Standby) என்ற வகையில் அதனை அமைக்கலாம். இன்னும் கூடுதலாக மின்சக்தியை மிச்சப்படுத்த, ஹைபர்னேஷன் (hibernation) என்னும் நிலைக்கு மாற்றலாம்.
இந்த இரண்டு நிலையிலும் மின்சக்தி வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும், திரும்ப பணியாற்ற வேண்டும் என்று முடிவெடுத்து இயக்க முற்படுகையில், எங்கு எந்த புரோகிராம்களைத் திறந்திருந் தோமோ அந்த நிலையிலும், எந்த பைலில் எங்கு பணியாற்றிக் கொண்டிருந்தோமோ அந்த இடத்திலும் நமக்குக் கம்ப்யூட்டர் இயக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.
Sleep mode நிலையில் மின்சக்தி மிச்சப் படுத்தப்பட்டாலும், உங்கள் கம்ப்யூட்டர் இயக்க நிலையில் உள்ளது. விண்டோஸ் சிஸ்டம், அப்போது இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புரோகிராம்கள், ராம் மெமரியில் இருக்கும் அப்போது திறந்து வைக்கப்பட்டுப் பணியில் இருக்கும் பைல்கள் ஆகியவற்றை உயிர்த்துடிப்புடன் வைத்திட, மின்சக்தி தேவைப்படுகிறது. ஆனால், ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் hibernation நிலையில் வைக்கப்படுகையில், சிஸ்டமானது ராம் நினைவகத்தில் உள்ள அனைத்தையும் ஒரு பைலில் காப்பி செய்து, ஹார்ட் ட்ரைவில் வைக்கிறது. பின்னர், கம்ப்யூட்டரை முழுவதுமாக ஷட் டவுண் செய்கிறது. எனவே ஹைபர்னேஷன் நிலை, கூடுதலாக மின்சக்தியை சேமிக்கிறது. ஆனால் சற்று மெதுவாக பழைய நிலைக்குத் திரும்புகிறது. இன்றைய காலத்திய பெர்சனல் கம்ப்யூட்டர் ஸ்லீப் நிலைக்குச் செல்வதும், மீண்டும் இயக்கத்திற்கு வருவதும், சொடக்குப் போடும் நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. ஹைபர்னேட் ஆவதற்கு ஏறத்தாழ அரை நிமிட நேரமும், மீண்டும் செயல்பாட்டிற்கு அதிலிருந்து வருவதற்கு அரை நிமிட நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
மிக அதிக நேரம் நிறுத்திவைத்திடப் போவதாக இருந்தால், ஹைபர்னேஷன் நிலையிலும், குறைவான நேரமே இயக்காமல் இருக்கப் போவதாக இருந்தால், ஸ்லீப் நிலையிலும் கம்ப்யூட்டரை வைப்பது நல்லது.
நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்துபவராக இருந்தால், டெஸ்க்டாப் திரையில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Properties தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Screen Saver என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Power பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Hibernate டேப்பில் கிளிக் செய்து Enable Hibernation. என்பதில் டிக் அடையாளத் தை ஏற்படுத்தவும். அடுத்து Apply பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்ததாக Power Schemes டேப்பில் கிளிக் செய்து standby மற்றும் hibernate ஆப்ஷன்களையும் காணலாம்.
நீங்கள் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 பயன்படுத்துபவராக இருந்தால், ஸ்டார்ட் கிளிக் செய்து Power என டைப் செய்திடவும். அடுத்து Power Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இடதுபுறப் பிரிவில், Choose when to turn off the display என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Sleep ஆப்ஷன் இருப்பதனைப் பார்க்கலாம். ஹைபர்னேஷன் பற்றி எதுவும் இருக்காது. எனவே Change advanced power settings என்பதில் கிளிக் செய்திடவும். “Sleep after” மற்றும் “Hibernate after” ஆகிய ஆப்ஷன்களைப் பெற Sleep பிரிவை விரிக்கவும். இங்கு நீங்கள் விரும்பும் வகையில் செட்டிங்ஸ் ஏற்படுத்தலாம். 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

வியாழன், 29 செப்டம்பர், 2011

2 கோடி பேர் பயன்படுத்தும் வே2எஸ்.எம்.எஸ்.

தங்கள் தளத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் களிடமிருந்து பெறும் எஸ்.எம்.எஸ். செய்திகளை, அவர்கள் குறிப்பிடும் மொபைல் போன்களுக்கு கட்டணம் எதுவுமின்றி அனுப்பும் சேவையை வே2எஸ்.எம்.எஸ் (Way2SMS.com) இணைய தளம் செய்து வருகிறது. இது ஓர் இந்திய இணைய சேவைத்தளமாகும். ஒரு மொபைல் போனில் சேமித்து வைப்பது போல, தொடர்பு கொள்ளும் நபர்கள், மொபைல் எண்கள், எஸ்.எம்.எஸ். செய்திகளை நமக்கென இந்த தளம் சேமித்து வைத்துத் தருகிறது. தற்போது இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 36.5 கோடி மொபைல் எண்களை, இந்த தளம் கையாள்கிறது. ஒவ்வொரு மாதமும் 5.5 கோடி மொபைல் போன் எண்கள் இந்த தளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 7 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இதில் இணை கின்றனர். இந்த தளத்தைத் தினந்தோறும் 30 நாடுகளில் உள்ள இதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தளம் மூலம் எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்புவது மட்டுமின்றி, நம் மொபைலுக்கு நினைவூட்டும் செய்திகளை அனுப்பும் வகையில் செட் செய்திடலாம். பிறந்தநாள், மண நாள் வாழ்த்துக்களைக் குறிப்பிட்டவர்களின் மொபைல் போனுக்கு, குறிபிட்ட நாளில் அனுப்பும் வகையில் அமைத்து வைக்கலாம். இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 18 வயது முதல் 30 வயதுக்குள்ளவர்களாக உள்ளனர். பல அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், காவல்துறை அலுவலகங்கள் ஆகியனவும் இந்த வசதியைப் பயன்படுத்தி வருவதாக, இந்த தளத்தின் தலைமை நிர்வாகி ராஜு தெரிவித்துள்ளார்.
நீங்கள் இந்த தள சேவையைப் பயன்படுத்த விரும்பினால், செல்ல வேண்டிய இணைய தள முகவரி www.way2sms.com

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கூடுதலாகக் கிடைக்கும் ஜிமெயில் வசதிகள்

கூகுள் குழுமத்திலிருந்து வந்ததனால் மட்டுமே, ஜிமெயில் அதிக வசதிகளைக் கொண்டிருப் பதில்லை. ஜிமெயில் இயக்கத்திற்கு தனியாகச் செயல்படும் புரோகிராமர்கள் பலரும், பல வசதிகளைத் தரும் புரோகிராம்களைத் தந்துள்ளனர். இவற்றை எந்தக் கட்டணமும் இன்றி நாம் பெற முடியும். மெயில் செட்டிங்ஸ் பிரிவில் லேப்ஸ் தளத்தில் இவற்றை இயக்க செட் செய்திட முடியும். இதன் மூலம் நம் ஜிமெயில் பயன்பாட்டினை, நம் விருப்பப்படி அமைக்க முடியும். அத்தகைய சில வசதிகளை இங்கு காணலாம்.

1. ஆயத்த பதில்கள் (Canned Responses): இதனைப் படிக்கையில், ஏதோ நாம் விடுமுறையில் ஊருக்குச் செல்கையில், அல்லது மின்னஞ்சல் பார்க்க இயலாத நாட்களில், நமக்கு வரும் அஞ்சல் களுக்கான பதில்களைத் தானாக அனுப்பும் வசதி போல் தெரியும். இது அதுமட்டுமல்ல; வழக்கமாக நாம் அனுப்ப வேண்டிய பதில்களை அல்லது வாடிக்கையாளர்களுக்கான செய்திகளை ஆயத்தமாகத் தேவைப்படும்போது அனுப்ப தயாரித்து வைக்கலாம்.

2. நிகழ்வுகள் நாட்காட்டி(Google Calendar Widget): இது ஒரு டெம்ப்ளேட் இணைப்பது போல. நமக்கு நாமே எழுதி வைக்கும் நினைவூட்டல் கட்டம். இதில் நாம் மேற்கொள்ள வேண்டிய நிகழ்வுகளை எழுதி அமைக்கலாம். இதனை கூகுள் காலண்டர் வசதி என்றும் அழைக்கலாம். இது ஜிமெயில் தளத்தின் இடதுபக்கத்தில் ஒரு கட்டமாக அமைக்கப்படும்.

3. கூகுள் முன் நினைவூட்டி (Google Docs Widget): உங்கள் நண்பர்கள் அல்லது தலைமை நிர்வாகியிடமிருந்து, உங்கள் கவனத்திற்கு கூகுள் டாக்ஸ் அனுப்பப் பட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தில், அதன் முன் தோற்றக் காட்சி ஒன்று காட்டப்படும். இதனால், நீங்கள் நேரங்கடந்து இதனைக் காணும் சூழ்நிலை தவிர்க்கப்படும்.

4. அஞ்சலில் இடம் காட்டும் மேப் (Google Maps preview): உங்கள் இமெயில் முகவரி ஏட்டில் உள்ள முகவரிகளுக்கான ஊர்கள் சார்ந்த சிறிய மேப் ஒன்று காட்டப்படும்.

5. படங்களை இணைக்க (Inserting Images): இந்த வசதி குறித்து சென்ற வாரம் கம்ப்யூட்டர் மலரில் ஒரு குறிப்பு தரப்பட்டது. அஞ்சல் செய்தியிலேயே போட்டோ மற்றும் படங்களை இடைச் செருகலாக அமைப்பது. இதன் மூலம் அந்த படங்களுக்கான குறிப்புகளையும் நாம் இணைக்கலாம். மற்றபடி நாம் படங்களை இணைப்பாகத்தான் அமைக்க முடியும்.

6. படித்ததாகக் குறித்துக் கொள் (Mark as Read message): நமக்கு வரும் அஞ்சல் செய்திகள் அனைத்தையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. சிலவற்றைத் திறந்து படிக்கும் எண்ணமும் நமக்கு இருக்காது. திறக்காத அஞ்சல்கள், படிக் காதவையாகத் தோற்றமளிக்கும். எனவே, இவற்றைப் படிக்காமலேயே, படித்ததாகக் குறித்துக் கொள்ளும் வசதியை இது தருகிறது.

7. அஞ்சல் முன் தோற்றம் (Message Sneak Peek): இந்த வசதி குறித்தும் சென்ற வாரம் எழுதப்பட்டது. மின்னஞ்சல் செய்தி யினைத் திறக்காமலேயே, அதில் உள்ளதைக் காட்டும் வசதி இது. இதிலிருந்து என்ன செய்தி உள்ளது என்பதனை நாம் அதனைத் திறக்காமலேயே உணர முடியும்.

8. மவுஸ் வழி உலா (Mouse Gestures): மவுஸைப் பிடித்தவாறே, அதனை அசைத்து, மின்னஞ்சல் பட்டியலில் செல்லும் வசதி இது. ரைட் கிளிக் செய்தவாறே, இடது பக்கம் மவுஸை நகர்த்தினால், முந்தைய மின்னஞ்சலுக்குச் செல்வீர்கள். வலது பக்கம் நகர்த்தினால், அடுத்த அஞ்சலுக்குச் செல்லலாம். மேலே நகர்த்தினால், இன்பாக்ஸ் செல்லலாம். இப்படியே பல நகர்த்தல்களை மேற்கொள்ளலாம்.

9. அனுப்பியவரின் நேரங்காட்டி (Sender’s Time Zone): மின்னஞ்சல் மூலம் நாம் பன்னாட்டளவில் உள்ள நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. அஞ்சலைப் பார்த்தவுடன் அவருடன் பேசலாம் என்று தோன்றுகிறதா? அந்த நேரத்தில், அவர் நாட்டில், அவர் ஊரில் என்ன நேரம்? தூங்கும் நேரமா? என்ற கேள்விகளுக்கு இந்த வசதி பதிலளிக்கிறது.

10. அனுப்பியதை நிறுத்து (Undo Send): அஞ்சல் ஒன்றை அனுப்பியவுடன், அடடா, அனுப்பியிருக்கக் கூடாதே என்று எண்ணுகிறீர்களா? சில நொடிகள் எனில், அது அனுப்பப் படுவதை நிறுத்த, இந்த வசதியைப் பயன் படுத்தலாம்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

புதன், 14 செப்டம்பர், 2011

கூகுள் டிக்ஷனரி மூடப்பட்டுவிட்டது

கூகுள் நிறுவனம் தான் இதுவரை வடிவமைத்துப் பராமரித்து வந்த கூகுள் டிக்ஷனரி தளத்தை மூடிவிட்டது. 2009 ஆம் ஆண்டில், கூகுள் நிறுவனம் தன்னுடைய டிக்ஷனரி ஒன்றைத் தன் சர்வரில் நிறுவியது. http://www.google. com/dictionary என்ற முகவரியில் இயங்கிய அந்த டிக்ஷனரி தளம் பலருக்குப் பிடித்துப் போயிற்று. இதன் சிறப்பான சில விசேஷ வசதிகள் நன்றாகவே இருந்தன. சொற்களுக்கு ஸ்டார் அமைத்து, பின் ஒரு நாளில் எளிதாக எடுத்துப் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டது பலருக்குப் பிடித்துப் போயிற்று.
இந்த தளம், தற்போது ஆகஸ்ட் 5 முதல் மூடப்பட்டுவிட்டது. மூடப்படுவதற்கான அறிவிப்பைக் கேட்டவுடன், பலர் இது குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். ஒருவர், முதல் முறையாக நான் கூகுள் நிறுவனத்தை வெறுக் கிறேன் என்று எழுதினார். கூகுளின் டிக்ஷனரி இருந்த தளத்திற்குச் சென்றால் (மேலே முகவரி தரப்பட்டுள்ளது) தளம் மூடப்பட்டதற்கான அறிவிப்பு தரப்பட்டுள்ளது. கூடுதல் விளக்க மும் கிடைக்கிறது. அதனைப் பார்க்கலாம்.
"கூகுள் தேடுதல் தளத்தில், நாங்கள் புதியதாக டிக்ஷனரி சாதனம் ஒன்றைப் பொறுத்தியுள்ளோம். இதன் மூலம் ஒரு சொல்லின் விளக்கத்தினைப் பெறலாம். இது கூகுள் டிக்ஷனரி தளம் தரும் அதே வசதியைத் தருவதால், கூகுள் டிக்ஷனரி தளத்தை மூடியுள்ளோம்' என்று கூகுள் அறிவித்துள்ளது.
சொற்களின் விளக்கம் பெற, சர்ச் பாக்ஸில் நேரடியாக அந்த சொல்லை டைப் செய்திடலாம். ரிசல்ட் பக்கத்தில் இடது பிரிவில் கிடைக்கும் டிக்ஷனரி டூலினைப் பயன்படுத்தி பொருள் பெறலாம். அல்லது நேரடியாக சர்ச் பாக்ஸில் define: என டைப் செய்து, பின் சொல்லை டைப் செய்து, பொருளைப் பெறலாம்.

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

இலவச ஆண்ட்டி வைரஸ் ஏ.வி.ஜி.2012

தனிப்பட்ட நபர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்த, இன்றும் மிகச் சிறந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களில் ஒன்றாக, ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் உள்ளது. இதன் புதிய தொகுப்பான ஏ.வி.ஜி. 2012 அண்மையில் வெளியிடப் பட்டுள்ளது. கட்டணம் செலுத்தி வாங்கும் தொகுப்பில் உள்ள பெரும்பாலான வசதிகள், இலவச புரோகிராமில் இருப்பது இதன் சிறப்பாகும். ஆண்ட்டி வைரஸ், ஸ்பைவேர், ரூட்கிட்ஸ் மற்றும் ஸ்பேம் மெயில்களைத் தடுக்க என இந்த புரோகிராமில் தனித்தனி தொகுப்புகள் அடங்கியுள்ளன. இதில் லிங்க் ஸ்கேனர் (Link Scanner) என்று ஒரு கூடுதல் வசதி ஒன்று தரப்பட்டுள்ளது. இது தேடல் முடிவு களையும், இணைய தளங்களுக்கான லிங்க்குகளையும் சோதனை செய்கிறது. இது இந்த புரோகிராமில் மட்டுமே காணப்படும் தனிச் சிறப்பு வசதியாகும்.
2008 ஆம் ஆண்டு ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் புரோகிராமின் செயலாக்கம் மிகவும் மெதுவாக இருந்ததாகப் பலர் குற்றம் சாட்டினார்கள். ஆனால், 2009 மற்றும் அடுத்து வந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு களில் பல குறைகள் களையப் பட்டதுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் பல வசதிகள் தரப்பட்டன. செயல்பாட்டினைப் பொறுத்தவரை, இன்று அவிரா மற்றும் அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் களுக்கு இணையாக இது கருதப்படுகிறது.
புதிய 2012 பதிப்பில், புரோகிராம் பைலின் அளவு 50% குறைக்கப் பட்டுள்ளது. இதனால் இணையத் திலிருந்து தரவிறக்கம் செய்வது வேகமாக நடை பெறுகிறது. இன்ஸ்டால் செய்வதும் வேகமாக மேற்கொள்ளப் படுகிறது. ஹார்ட் டிஸ்க்கில் இந்த புரோகிராம் எடுத்துக் கொள்ளும் இடமும் குறைக்கப் பட்டுள்ளது. ப்ராசசர் இயங்கும் அளவு மற்றும் நினைவகத்தின் இடமும் 20% குறைவாக உள்ளது.
இணையத்தில் உலாவுகையில் மட்டுமின்றி, ஆன்லைன் சேட் செய்திடும்போதும் வைரஸ், மால்வேர், வோர்ம்ஸ், ஆட்வேர் மற்றும் ஸ்பேம் ஆகியவற்றை எதிர்க்கிறது. எந்த நேரமும் இதற்கான உதவிகள் கிடைக்கின்றன. விண்டோஸ் எக்ஸ்பி உட்பட அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்குகிறது.
இதனை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://avg.en.softonic.com/download

நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

லேப்டாப் பிரியர்களின் தாகத்தை தணிக்க வந்த புதிய எச்பி லேப்டாப்!

நவீன தொழில்நுட்பத்துடன் வரும் லேப்டாப்புகளுக்கு வரவேற்பு தற்போது மிக அதிகம். அதற்காகவே வீடியோ கேம் வசதிகளோடும் க்ராபிக்ஸ் வசதிகளோடும் ஒவ்வொரு நாளும் புதிய புதிய லேப்டாப்புகள் வந்து கொண்டு இருக்கின்றன. எல்லா லேப்டாப் தயாரிப்பாளர்களும் இந்த தொழில் நுட்பங்களை மனதில் வைத்து அதற்கேற்ற முறையில் நவீனமான லேப்டாப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அவற்றில் புதியதாக வந்திருப்பது எச்பி பெவிலியன் டிவி-6டி லேப்டாப்பாகும். குறிப்பாக லேப்டாப் பிரியர்களுக்காகவே இந்த லேப்டாப் உயர்ந்த தரத்தில் வந்திருக்கிறது. இந்த புதிய லேப்டாப் தரம் வாய்ந்த அலுமினிய தகடால் செய்யப்பட்டு கருப்பு வண்ணத்தில் மின்னுகிறது. இதன் பிரைட் வீயூவ் டிஸ்ப்ளே 15.6 இன்ச் அளவைக் கொண்டுள்ளது. இதன் ஓஎஸ் விண்டோஸ் 7 ஹோம் ப்ரீமியம் 64 பிட் ஆகும்.

இதன் ப்ராசஸர் 2ஜி இன்டல் கோர் 5 ப்ராசஸராகும். டர்போ பூஸ்ட் இதில் உள்ளதால் கம்புயூட்டிங்கில் எந்த பிரச்சினையும் இருக்காது. டர்போ பூஸ்ட் எந்த ஒரு சிக்கலான கணிதத்தையும் எளிதாக தீர்த்து வைக்கும். இதன் இன்டல் க்ராபிக்ஸ் 3000 இந்த லேப்டாப்பின் இன்னுமொரு சிறப்பம்சமாகும்.

வீடியோ கேம் மற்றும் கிராபிக்ஸ் வசதி இதில் அட்டகாசமாக உள்ளது. இதன் தகவல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் 8ஜிபி வரை 2டிஐஎம்எம் ஸ்டாட்ஸ் மூலம் சேமித்து வைக்கலாம். இதன் ஹார்ட் டைரவ் 5400 ஆர்பிஎம்முடன் 640ஜிபி கொண்டிருக்கிறது. டேட்டா மேனஜ்மென்ட்டுக்காக அதிவிரைவான 3.0 யுஎஸ்பி போர்ட்டுகளும் உள்ளன. மேலும் மல்டி மெமரி கார்டுகளுக்கான ஸ்லாட்டும் தனியாக உள்ளது.

எச்பி பெவிலியன் டிவி6டி லேப்டாப் பல புதிய தொழில் நுட்பங்களுடன் இருக்கிறது. கைரேகை அறியும் வசதி உள்ளதால் இந்த லேப்டாப்புக்கு பாதுகாப்பு வசதியும் அதிகமாக உள்ளது. ஆடியோ வசதியைப் பார்த்தால் இது 4 ஆடியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் மின்திறனைப் பார்த்தால் 6 செல் பேட்டரியுடன் 5.5 மணி நேரம் வரை இயங்கும் வலிமையைக் கொண்டுள்ளது. எச்பி பெவிலியன் டிவி6டி லேப்டாப் ரூ.34,552க்கு இந்தியாவில் கிடைக்கிறது.
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

கம்ப்யூட்டரை உங்களுடையதாக மாற்ற

கம்ப்யூட்டர் நம்முடையதுதான் என்றாலும், யூசர் நேம், அதற்கான படங்களில் மட்டுமே நம் பெயர், படங்கள் இடம் பெறுகின்றன. இவற்றுடன் இன்னும் சில இடங்களில் நம் பெயர்களை அமைத்து, கம்ப்யூட்டரில் நம் பெயரையும் படத்தையும் போட்டு, முழுமையான நம் கம்ப்யூட்டராக எப்படி மாற்றலாம் என்று பார்க்கலாம். இதனை விண்டோஸ் எக்ஸ்பிக்கு குறிப்புகளாகத் தருகிறேன்.
விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பு வதனைப் பதிக்கலாம். முதலில் டெஸ்க்டாப்பில் உள்ள My Computer ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சிலரின் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் லோகோ அருகே, கம்ப்யூட்ட ரைத் தயாரித்த நிறுவனத்தின் லோகோ கூட இருக்கலாம். அப்படியானால், நம் லோகோ அல்லது பெயர் எப்படி இணைப்பது?
1. முதலில் ஒரு படம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். மைக்ரோசாப்ட் பெயிண்ட் புரோகிராமினை இயக்கவும். இதற்கு Start, All Programs, Accessories, Paint எனச் செல்லவும்.
2. இங்கு நாம் அமைக்க இருக்கும் படம் அல்லது லோகோ 180x115 என்ற அளவிலான பிக்ஸெல்களில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதால், கான்வாஸ் எனப்படும் படத்தின் தன்மையை செட் செய்திட வேண்டும். இதற்கு Image மற்றும் Attributes தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பாக்ஸில், அளவு யூனிட்டாக Pixels என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் மேலே சொன்ன அளவினை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
3. டூல்பாரில் உள்ள டூல்களைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் லோகோவினை அமைக்கவும். லோகோவின் பின்னணியினை அமைக்க Fill Tool பயன்படுத்தலாம். Text Tool பயன்படுத்தி, கலரில் டெக்ஸ்ட் அமைக்கலாம். மேலும் கிளிப் ஆர்ட் காலரியிலிருந்து ஏதேனும் நமக்குப் பிடித்த படத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். உங்கள் எண்ணங்களுக்கேற்ற வகையில், படங்கள், போட்டோக்களை இணைத்து லோகோவினைத் தயார் செய்திடலாம்.
4. அடுத்து File மெனு கிளிக் செய்து அதில் Save As என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் டயலாக் பாக்ஸில், சேவ் செய்ய வேண்டிய டைரக்டரியாக C:\Windows\System32 என்ற டைரக்டரியைத் தேர்ந்தெடுக்க வும். சேவ் செய்யப்படும் பைலின் பெயராக oemlogo.bmp என்று கொடுக்கவும். இப்போது லோகோ தயாராகி விட்டது. அடுத்து டெக்ஸ்ட் என்டர் செய்ய வேண்டும். இதற்கு நோட்பேட் பயன்படுத்தலாம்.
1. நோட்பேட் கிடைக்க Start, All Programs, Accessories, Notepad என்று செல்லவும். நோட்பேடில் கீழ்க்கண்டவாறு டைப் செய்திடவும்.
[General]
Manufacturer=(இங்கு எதனையும் கொடுக்கலாம்)
Model=
[Support Information]
Line1=This computer was devised by
Line2=Mr..............
Line3=Enjoy Using It
Line4=************
இங்கு சமன் (=)அடையாளத்தினை அடுத்து நீங்கள் எந்த தகவலையும் டைப் செய்திடலாம். இன்னும் அதிகமான வரிகளையும் இணைக்கலாம். ஆனால் அதே பார்மட்டில் இருக்க வேண்டும்.
2. இங்கு அனைத்தும் முடிந்தவுடன் File தேர்ந்தெடுத்து, அதில் Save As என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் டயலாக் பாக்ஸில், மேலே குறிப்பிட்ட அதே டைரக்டரியின் (C:\Windows\System32) பெயரை டைப் செய்து, பைலை oeminfo.ini என்ற பெயரில் சேவ் செய்திடவும். இதில் கவனமாக, பைல் டைப் (File Type) என்பதில் டெக்ஸ்ட் டாகுமெண்ட் (Text Document) என்பதற்குப் பதிலாக All Files என இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மேலே சொன்ன அனைத்தையும் சரியானபடி நீங்கள் செய்துவிட்டால், அடுத்த முறை கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து, பின்னர் சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கையில், உங்களுடைய புதிய லோகோ மற்றும் தகவல்களைக் காணலாம். நம் செய்தியைக் காண Support Information என்பதில் கிளிக் செய்திட வேண்டும் என்பதனை மறக்க வேண்டாம்.
இன்னொரு இடத்திலும் உங்கள் பெயரை, அல்லது விரும்பும் லேபிளை அமைக்கலாம். அது ஸ்டார்ட் பட்டனாகும். அனைவரும் ஸ்டார்ட் பட்டனை எப்படியும் பார்த்து பயன்படுத்துவர் என்பதால், இதில் உங்கள் பெயர் அமைந்தால், இன்னும் நன்றாக இருக்கும்.
ஆனால், இங்கு இதற்கெனக் கிடைக்கும் புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். அந்த புரோகிராமின் பெயர் Start Button Renamer. கிடைக்கும் தள முகவரி: http://www.kellyskornerxp.com/regs_edits/ ProgFull.zip.
இங்கு இன்ஸ்டலேஷன் எதுவும் தேவை இல்லை. Start Btn என்று இருப்பதில் கிளிக் செய்தால் போதும். இனி ஸ்டார்ட் பட்டனில் என்ன சொல் அல்லது பெயர் இருக்க வேண்டுமோ, அதனை டைப் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். உடனே உங்கள் ஸ்டார்ட் பட்டன் பெயர் நீங்கள் டைப் செய்திட்ட பெயராக இருப்பதனைக் காணலாம். ஒவ்வொரு முறை நீங்களோ, அல்லது மற்றவர்களோ, கம்ப்யூட்டரில் லாக் ஆன் செய்திடுகையில், இந்த ஸ்டார்ட் பட்டனில் உள்ள சொல்லை, மேற்படி புரோகிராம் மூலம் மாற்றிக் கொள்ளலாம். 
நண்பர்களே ! தாங்கள் இந்த தளத்தில் பார்வையிட்டதற்கான தடத்தை விட்டுசெல்லுங்கள் கமெண்ட்ஸ்(comments)மூலமாக!.

Site Counter

free counters

Ads

Friends activity

Free Mp3 downloads

Instant Videos

Blogger Themes

Make Money Online

Affiliate Program ”Get Money from your Website”

டாப் தமிழ் வலைப்பூ இணைப்பு

Make a traffic

Lot of Visitors

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More